புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம்; தவெக சார்பில் நெல்லையில் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு - புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு
Published : Mar 9, 2024, 7:35 AM IST
திருநெல்வேலி: உலகம் முழுவதும் மகளிரின் மகத்துவத்தை அறியும் வண்ணம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, உடையார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்குப் பேனா, நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுபத்ரனா பங்கேற்று மாணவர்களுக்கு நோட்டு, பேனாக்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து மாணவிகள் மத்தியில், பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் சம்பவம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமீபத்தில், புதுச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அப்போது சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண் குழந்தைகள் தங்களுக்கு இதுபோன்ற பிரச்னை வந்தால் தயங்காமல் பெற்றோர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும், உங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு எனவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபத்ரனா, "தினந்தோறும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும். மகளிர் தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யாரையும் சார்ந்து வாழக்கூடாது. புதுச்சேரி விவகாரத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கப் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்" எனக் கூறினார்.