ஊழியர்களுக்கு கார் பரிசளித்த நிர்வாகம்.. தஞ்சாவூரைச் சார்ந்த ஐடி நிறுவனத்தின் அசத்தல் செயல்பாடு! - BBS CEO Hamsavardhan Mohan
Published : Feb 6, 2024, 4:21 PM IST
|Updated : Feb 8, 2024, 4:49 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிபிஎஸ் (Baruch Business Solutions India Pvt Ltd) என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 11 ஊழியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு நேற்று (பிப்.05) விலை உயர்ந்த புத்தம் புதிய வாகனங்களை பரிசாக வழங்கி, அந்த ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது அந்நிறுவனம்.
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு, BBS என்ற பெயரில் ஹம்சவர்தன் என்ற இளைஞர் 4 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பேருடன் ஐடி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனம், தற்போது 400 பேருடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், நிறுவனர் ஹம்சவர்சதன், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, தனது நிறுவனத்தில் நிதி, மேலாண்மை மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் தலைமை பொறுப்பில் உள்ள 5 பெண் ஊழியர்கள், 6 ஆண் ஊழியர்கள் என மொத்தம் 11 பேரை தேர்வு செய்து, அவர்களை குடும்பத்துடன் வரவழைத்து, விலை உயர்ந்த புத்தம் புதிய கார்களை நிறுவனர் ஹம்சவர்தன் பரிசாக வழங்கினார்.
எதிர்பாராமல் கிடைத்த இந்த பரிசால், ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும், இந்த 11 பேருடன் நின்று விடாமல், தொடர்ந்து சிறந்த பணியாளர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என BBS ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஹம்சவர்தன் உறுதி அளித்து உள்ளார்.