நெல்லையில் சேறும் சகதியுமான சாலையில் வழுக்கி விழும் மக்கள்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - People falling on the muddy road - PEOPLE FALLING ON THE MUDDY ROAD
Published : May 15, 2024, 6:57 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி 10 வது வார்டு பரணி நகர் பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது. பணிகள் முடிவு பெற்ற நிலையிலும், அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதுமாக சரிசெய்யப்படாமல் மணல்மேடுகளாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மே 13ஆம் தேதி இங்கு பெய்த மழையின் காரணமாக, மணல்மேடுகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென சேற்றால் வாகனம் வழுக்கிய நிலையில், வாகனத்தில் இருந்த உறவினர் பெண் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து உதவி செய்துள்ளனர். இதனால், சாலைகளை உடனடியாக மழைக் காலத்திற்கு முன்பாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.