திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல அலைமோதிய கூட்டம்!
Published : 4 hours ago
திருப்பூர்: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரியும் ஊழியர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்கென சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெருமை வாய்ந்த திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவர்களும் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது, காவல் துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகள் மூலம் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். தொடர்ந்து ஏராளமான பயணிகள் குவிந்ததால் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் உடனடியாக கரூர், திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட தனியார் டிராவல்ஸ் வாகனங்களில் பயணிகள் சென்றனர்.