அடிக்கிற வெயிலுக்கு ஒரு குளியல் நல்லா இருக்கும்ல.. கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - KUMBAKKARAI Falls - KUMBAKKARAI FALLS
Published : Oct 6, 2024, 6:26 PM IST
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கோடைகாலம் முடிந்தாலும், அவ்வப்போது வெயிலின் தாக்கமும் சுட்டெரிக்கிறது. விடுமுறை தினமான இன்று (அக். 6) பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் என ஏராளமானோர் கும்பக்கரை அருவிக்கு கூட்டம் கூட்டமாக காலை முதலே வரத் தொடங்கினார்.
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைந்து தங்களது விடுமுறை நாளை இனிமையாக கழித்தனர். அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.