பழனி முருகன் கோயில் தைப்பூசம் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி வசூல்! - Palani murugan temple
Published : Feb 1, 2024, 3:37 PM IST
திண்டுக்கல்: தைப்பூசத்தைத் தொடர்ந்து பழனி முருகன் கோயில் உண்டியல் நிரம்பிய நிலையில், நேற்று (ஜன.31) எண்ணப்பட்டு, அதில் ரூ.3.4 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பாதயாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியதால் உண்டியல் நிரம்பிய நிலையில், அவற்றை எண்ணும் பணியில் நேற்று கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன்படி, ரூ.3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 840 ரொக்கம், 221 கிராம் தங்கம், 631 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் 9 ஆயிரத்து 326 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.