சிசிடிவியால் சிக்கிய 25வது செயின் பறிப்பை அரங்கேற்றிய நபர்! - CHAIN SNATCHING CCTV - CHAIN SNATCHING CCTV
Published : Jul 14, 2024, 5:15 PM IST
சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர், 2வது தெருவில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (71). இவர் கடந்த ஜூலை 7ம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
உடனே இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சேலையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையில் நடத்தியதில், பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தினேஷ் பாபு (42) என்பது தெரியவந்தது. அவரை கைது சேலையூர் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்திய போது, கடந்த பத்து வருடங்களாக பல இடங்களில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதியில் தனி ஒருவனாக தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு பல முறை சிறைக்குச் சென்று வெளியே வந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டு சேலையூர் பகுதியில் 25வது செயின் பறிப்பை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. பின்னர், தினேஷ்பாபுவிடம் இருந்து நான்கரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.