கட்சிப் பணியை தொடங்கிய தமிழக வெற்றி கழகம்.. தேனி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெக நிர்வாகிகள்! - தேனி தவெக நிர்வாகிகள்
Published : Feb 17, 2024, 1:22 PM IST
தேனி: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனிடையே, நடிகர் விஜய் தான் நிர்வகித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரான விஜய், மாவட்ட அளவில் பொறுப்புகளில் இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளாக அறிவித்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி களப்பணி ஆற்ற உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில், தமிழக வெற்றி கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, வேட்டி, சேலை மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கு பயன்படக்கூடிய மண்வெட்டி மற்றும் தட்டு உள்ளிட்ட உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய இளைஞரணி செயலாளர் பிரகாஷ், “தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சி பெயரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயர் தெரியும் அளவிற்கு செயல்பாடுகள் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.