3 டன் எடையுள்ள தேரினை தோளில் தூக்கிய பக்தர்கள்.. தஞ்சை முத்து மாரியம்மன் கோயில் தூக்குத்தேர் திருவிழா கோலாகலம்! - Thooku ther Thiruvizha - THOOKU THER THIRUVIZHA
Published : May 18, 2024, 8:07 PM IST
தஞ்சாவூர்: பின்னையூர் முத்து மாரியம்மன் கோயில் தூக்குத்தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, 3 டன் எடையுள்ள தேரினை தூக்கிக்கொண்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
தஞ்சை மாவட்டம், பின்னையூரில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ஆம் தேதி கோலாகலமாகத் துவங்கியது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தூக்குத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில், கிராம மக்கள் மண் கலயத்தில் நவதானியங்கள் வைத்து, புளிசாதம் படைத்து அய்யனார், சூல பிடாரிக்கு படையலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து, கோயில் எதிர்புறம் உள்ள திடலில் அய்யனார், சூல பிடாரி ஆகிய தெய்வங்கள் கோபுரம் போல உயரமாக அலங்கரிக்கப்பட்ட 3 டன் எடையுள்ள தேரில் வைக்கப்பட்டு, அவற்றை கிராம மக்கள் தோளில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.