தஞ்சாவூரில் திருப்புடைத் தாளம் மல்லாரி பாடி இசைக் கலைஞர்கள் புதிய முயற்சி - Thirupudai Thalam mallari
Published : Mar 16, 2024, 7:41 AM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதிய முயற்சியாக திருப்புடை தாளம் மல்லாரி பாடி இசைக் கலைஞர்கள் இசைத்தனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச் செய்தவர், இவரது புகழைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சையில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீதியாக பிரம்ம சபா 80வது ஆண்டு இசை விழா கடந்த மார்ச் 14 முதல் வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் தஞ்சையில் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலைமாமணி டி.ஆர்.கோவிந்தராஜன் குழுவினரின் நாத சங்கமம் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதில் தஞ்சாவூரில் புதிய முயற்சியாக திருப்புடை தாளம் மல்லாரியை ஒருங்கே இசைத்தனர்.
மல்லாரி என்பது கோயில்களில் சுவாமி புறப்பாடு மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் நாதஸ்வரத்தால் வாசிக்கப்பட்டது. நாளடைவில் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் சேர்ந்து வாசிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட நேரம் வாசிக்கப்படும் திருப்புடை தாளம் மல்லாரியை கலைமாமணி டி.ஆர். கோவிந்தராஜன் தவில், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா வாய்ப்பாட்டு, திருமெய்ஞானம் ராமநாதன் நாதஸ்வரம், விஜயராகவன் வயலின், முருகபூபதி மிருதங்கம் ஆகிய குழுவினரால் இசைக்கப்பட்டது.
காலஞ்சென்ற திருமெய்ஞானம் நாதஸ்வர மேதை நடராஜசுந்தரம் பிள்ளை அவர்களால் 40 வருடங்களுக்கு முன்பு திருப்புடை தாளம் மல்லாரி வாசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மல்லாரியை கால சூழ்நிலையால் யாரும் முயற்சி செய்யாத நிலையில் தற்போது அந்த திருப்புடை தாளம் மல்லாரியை இக்குழுவினர் இசைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், தியாக பிரம்ம சபா தலைவர் சீனிவாசன், செயலாளர் மெளலீஸ்வரன், விழா குழு தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், இசை ரசிகர்கள் கலந்து கொண்டு இசையைக் கேட்டு ரசித்தனர்.