முதுகானபள்ளி எருது விடும் விழா; முரண்டு பிடித்த காளைகளுடன் களமாடிய வீரர்கள்! - Muduganapalli Erudhu vidum vizha
Published : Mar 10, 2024, 7:06 PM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே முதுகானபள்ளி கிராமத்தில், திம்மராய சுவாமி கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச் 10) காலை எருது விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இராயக்கோட்டை, சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள், கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்டு சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க காளையர்களும் போட்டி போட்டதால், எருது விடும் விழா சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. காளைகளை போட்டிப்போட்டு கொண்டு அடக்கிய இளைஞர்கள், காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை அவிழ்த்துச் சென்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாகலூர், பேரிகை காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டி நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கையாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த எருது விடும் திருவிழாவைக் காண தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டுகளித்தனர்.