தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Vedaranyam government hospital - VEDARANYAM GOVERNMENT HOSPITAL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 4:10 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளான ராயநல்லூர், முத்துப்பேட்டை, பாண்டி, நெடும்பலம், எடையூர், கச்சனம், பாமணி என பல்வேறு கிராமங்களிலிருந்து தினசரி 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் நபர்கள் நள்ளிரவில் மருத்துவமனை வளாகத்தில் தங்குவது வழக்கம்.

அவ்வாறு மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அந்த நபர்களிடமிருந்து செல்போன்கள் திருடு போவதாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று திருத்துறைப்பூண்டி அருகே எடையூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவியான ரம்யா பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரபாகரன் மருத்துவமனை வரவேற்பு நுழைவாயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலை 4.30 மணியளவில் மர்ம நபர் பிரபாகரனின் சட்டைப் பையில் இருக்கும் செல்போனை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு தப்பியுள்ளார்.

காலையில் எழுந்து செல்போனை தேடிய பிரபாகரன், செல்போன் காணாமல் போனதை அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த காவல்துறையினர், மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றினர். அதில் ஒரு மர்ம நபர் செல்போனை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், இவ்வாறு அரசு மருத்துவமனையில் செல்போன் திருடும் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி அந்த மர்ம நபர் யார் என்று திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details