பார்வையிழந்த இசைக் கலைஞருக்கு ரிதம் பேடு பரிசளித்த எம்எல்ஏ க.அன்பழகன்! - MLA Anbalagan Gifts Blind Musician
Published : Aug 2, 2024, 7:09 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் அண்ணா நகரைச் சேர்ந்த, பிறவியிலேயே தனது இரு கண்களையும் இழந்த இசைக் கலைஞர் சரவணன் (45). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை தனியாகவும், குழுவாகவும் நடத்தி வருகிறார். இவரது தந்தை சந்தானம் தையற்கலைஞர், தாய் தமிழரசி. தற்போது இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை.
இவர் பார்வைத்திறன் அற்றோருக்கான சிறப்புக் கல்வி பயில தஞ்சையில் உண்டு உறைவிடப் பள்ளியில் இவரது பெற்றோர் சேர்த்து விட்டுள்ளனர். இவரது இசை ஆர்வத்தைப் பார்த்து இவரது தந்தை இவருக்கு மிருதங்கம், பிறகு தபேலா, கடம், கஞ்சிரா உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்க கற்றுக் கொடுத்தார். பின்னர், சென்னையில் ரிதம் போர்டில் வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், சொந்தமாக ரிதம் பேடு இருந்தால் மாதம்தோறும் தனது செலவில் ரூபாய் 5 ஆயிரம் வரை மிச்சமாகும் என சாக்கோட்டை க.அன்பழகனிடம் சரவணன் கூறியிருந்த நிலையில், எம்எல்ஏ தனது சொந்த நிதி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எமகா டிடீஎக்ஸ் ஸ்டிக் ரிதம் பேடு (குச்சிகளை பயன்படுத்தி இசைத்தல்) மற்றும் அதனுடன் இணைந்த கையில் இசைக்கும் ஹேன்ட்சோனிக் ரிதம் பேடு கருவியையும் ஒலிபெருக்கி அமைப்புடன் வாங்கி, அதனை இன்று தனது கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து சரவணனுக்கு அன்பளிப்பாக அளித்து, இசையால் அசத்திய சரவணனை பாராட்டி பொன்னாடை அணித்து பாராட்டியுள்ளார்.