சாலையில் விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் ஆர்.காந்தி... குவியும் பாராட்டுக்கள்! - today tamil news
Published : Jan 25, 2024, 10:54 AM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாராஞ்சி அரக்கோணம் செல்லும் சாலையில் நேற்று (ஜன.24) மாலை இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலத்த அடிபட்டு காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அந்த வழியாக சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, சாலை விபத்தில் காயமடைந்தவரைக் கண்டு உடனடியாக காரை நிறுத்திய அமைச்சர், தன்னுடைய உதவியாளர்கள் மூலமாக மயங்கிய நிலையில் பலத்த காயமடைந்தவரை உடனடியாக மீட்டு தனியார் ஆட்டோவின் மூலமாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தற்போது விபத்தில் சிக்கிய அந்த நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயலுக்காக அமைச்சர் ஆர்.காந்தியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.