கேலோ இந்தியா போட்டிகள்: கோகோ போட்டியில் தங்கம் வென்றது மகாராஷ்டிரா..!
Published : Jan 31, 2024, 9:16 AM IST
மதுரை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன. அந்த வகையில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதனிடையே, நேற்று (ஜன.30) நடைபெற்ற கோகோ (Kho kho) விளையாட்டின் இறுதிப்போட்டியை, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தார்.
அதில், பெண்கள் பிரிவு ஆட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மோதின. ஆட்ட இறுதியில், 6 புள்ளிகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒடிசா அணி, 24 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மேலும், மூன்றாம் இடத்தை பிடித்த டெல்லி மற்றும் குஜராத் அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றன.
ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியும் டெல்லி அணியும் மோதின. மகாராஷ்டிரா அணி 40 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. டெல்லி அணி 30 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மூன்றாம் இடத்தை பெற்ற குஜராத் மற்றும் கர்நாடக அணிகள் வெண்கலம் பதக்கங்களை வென்றன.