களைகட்டிய களம்பூர் காளை விடும் திருவிழா.. 50 பேர் காயம்! - மாசி மாத கிருத்திகை திருநாள்
Published : Feb 18, 2024, 8:03 AM IST
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில், மாசி மாத கிருத்திகை திருநாளை முன்னிட்டு, 38-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று (பிப்.17) வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த வகையில், இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
அவ்வாறு பங்கேற்று வாடிவாசல் விழியாக துள்ளி குதித்தோடிய காளைகளை, காளைபிடி வீரர்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தினர். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2ஆம் பரிசாக 65 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் என 68 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த காளை விடும் திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க, ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.