பெரம்பலூர் சில்லக்குடி ஜல்லிக்கட்டு.. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்! - Chillakkudi Jallikkattu Competition
Published : Feb 27, 2024, 7:22 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் துவக்கி வைத்தார். வெகு விமரிசையாக தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டது. அதேபோல மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி துவங்கிய நிலையில், காளைகள் வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப் பாய்ந்து வீரர்களைச் சுற்றவிட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கோகுல், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.