குற்றாலம் மெயின் அருவியில் அபாய ஒலி.. பொதுமக்களை பாதுகாப்பாக வெறியேற்றிய போலீசார்! - COURTALLAM flood alert
Published : May 31, 2024, 11:41 AM IST
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில், புதிதாக பொருத்தப்பட்ட அபாய ஒலிப்பானை ஒலிக்கச் செய்து சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றினர்.
தென்காசி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், போலீசார் வெள்ள அபாய எச்சரிக்கைக்காக நிர்வாகம் சார்பில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பக்கூடிய அபாய ஒலிப்பனை ஒலிக்கச் செய்து அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றினர்.
தொடர்ந்து, தண்ணீர் வரத்து குறைய தொடங்கிய நிலையில், அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் வரத்தை பொறுத்து அருவியில் குளிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.