இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Government bus hits bike
Published : May 2, 2024, 9:31 PM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேரடி என்ற பகுதியில் உள்ள வளைவில் அடிக்கடி சாலை விபத்தானது நேரிடுவதால் அங்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் காரணமாக வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக அப்பகுதியைக் கடந்து செல்வதால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நேரிடுகிறது.
இந்த நிலையில், குத்தாலம் தேரடி பகுதியில் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சாலை வளைவில் வந்த கார் சாலையைக் கடக்க முயன்றுள்ளது. இதனையடுத்து காரில் மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குத்தாலம் தாலுகா அரையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், பின்னால் அமர்ந்து வந்த சிறுவன் தமிழரசன் ஆகிய இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது சிறுவன் தமிழரசன் பேருந்தின் முன்பக்கத்தில் மாட்டி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். சிறுவனின் இரண்டு கால்களும் சிராய்ப்பு ஏற்பட்டு தேய்ந்து படுகாயமடைந்தது.
பின்னர் சுரேஷ், தமிழரசன் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு வருகின்றனர்.