வேலூர் கலெக்டர் ஆபிஸில் உலாவிய 4 அடி நீள கண்ணாடி விரியன்.. பத்திரமாக மீட்ட வனத்துறை! - SNAKE
Published : Dec 15, 2024, 9:35 PM IST
வேலூர் : வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகாமையில் புதர் மண்டியுள்ள இடத்தில் பாம்பு ஒன்று உலாவுவதாக அங்கிருந்தவர்கள் வேலூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பெயரில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த வனக் காப்பாளர் நவீன் குமார் தலைமையிலான வனத்துறையினர் அலுவலகத்தில் உலாவிய பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த 4 அடி நீளமுடைய கண்ணாடி விரியன் பாம்பை நீண்ட நேரம் போராடி பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள அலமேலுமங்காபுரம் காப்பு காட்டில் விட்டனர்.
தற்போது கண்ணாடி விரியன் பாம்பின் இனப்பெருக்கம் காலம் என்பதால், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டியுள்ள இடங்களை பாதுகாப்பாக சுத்தம் செய்யும்படி தூய்மைப் பணியாளர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.