அரியலூர்: குளக்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் மழை வேண்டி பூச்சொரிதல் விழா! - Kashi Vishwanath Temple
Published : May 7, 2024, 4:02 PM IST
அரியலூர்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெளியில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் பல்வேறு கோயில்கள், தேவாலயங்கள், மற்றும் மசூதிகளில் மழை வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் அரியலூர் நகரில் குறிஞ்சான் குளக்கரையில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை வேண்டியும், மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக பூக்கூடை எடுத்து பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்து சிவபெருமானுக்கு மலர்களைத் தூவி பூச்சொரிதல் செய்தனர்.
விழாவில் சிறுவர்கள் சிவபெருமான், விசாலாட்சி அம்மை போன்ற வேடமணிந்து பூச்சொரிந்தனர். இந்த விழாவில் அரியலூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சிவபெருமானையும் விசாலாட்சி அம்மனையும் வழிபட்டனர். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.