பாதை பிரச்சனையில் விவசாய நிலத்திற்கு தீ வைப்பு: 3 ஏக்கர் நிலம் கருகி நாசம்
Published : Feb 12, 2024, 9:29 AM IST
தேனி: ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், காமராஜ். இவர் அப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக விவசாயம் பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, விவசாயில் தோட்டத்திற்கு முன்பு உள்ள நபரின் தோட்டத்தில் அமைந்துள்ள பொது வழிப் பாதையை கடந்து தான் அவரது தோட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனால் விவசாயி காமராஜ் தனது தோட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம், அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளரிடம் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனது தோட்டத்திற்கு செல்லும் பாதையை அடைத்து வைத்து அந்த பாதை தனக்கு சொந்தம் என அருகில் உள்ள நிலத்துக்காரர் தகராறு செய்ததால், இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜதானி காவல் நிலையத்தில், காமராஜ் புகார் அளித்துள்ளார்.
பின்னர், இருதரப்பு நிலத்தின் உரிமையாளர்களையும், போலீசார் சமாதானம் செய்து வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காமராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆத்திரமடைந்த அருகில் உள்ள நில உரிமையாளரின் உறவினர்கள், ஆள் இல்லாதா நேரத்தில், அவரது தோட்டத்திற்குள் நேற்று (பிப்.11) புகுந்து தீயை பற்ற வைத்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி காமராஜ் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆனால், சுமார் 3 ஏக்கர் வரை தீயில் கருகி சாம்பலாகி உள்ளதாகவும், தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக விவசாயி காமராஜ் தெரிவித்தார். மேலும், தனது தோட்டத்திற்கு தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.