கரை ஒதுங்கிய உலோக உருளை..! வெடிபொருள் நிபுணர் குழு ஆய்வு..! அச்சத்தில் மீனவ கிராம மக்கள்..!
Published : Feb 13, 2024, 7:38 AM IST
மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தின் கடற்கரை பகுதியில் நேற்று (பிப்.12) காலை உலோகத்தால் ஆன, உருளை வடிவிலான ஒரு பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருளை, சுமார் ஒன்றை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்டிருந்தது. மேலும் அதன் மீது, "அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள்" என அச்சிடப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறைக்கும், பூம்புகார் கடற்கரை காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர பாதுகாப்பு காவல்துறை, அந்த உருளையான பொருளை பார்வையிட்டு, அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி பாதுகாப்பு பணிகளைப் பலப்படுத்தினர்.
அதன் பின்னர், அந்த உருளை குறித்து வெடிபொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து, அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அபாயம் என அச்சிடப்பட்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது, நாயக்கர் குப்பம் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பான சூழலையும் ஏற்படுத்தியது.