“இது என் இடம்..” அடம்பிடித்த யானையை காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினர்! - Elephant issue in Coonoor - ELEPHANT ISSUE IN COONOOR
Published : Jun 10, 2024, 3:16 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. இந்த இடத்தின் சமவெளிப் பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு காட்டு யானைகள் வருவது வழக்கம். இந்நிலையில், ஒற்றை ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்தது. இந்த யானை கடந்த இரு வாரங்களாக காட்டேறி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்ததாக வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும், இந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் பிறந்தது என்பதால், இங்கு இருந்து செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த காட்டுயானை பிடித்து காட்டுக்குள் விடுவதற்காக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், லாஸ் நீர்வீழ்ச்சி அருகே வனத்துறையினர் யானையைக் காட்டுக்குள் அனுப்ப முயற்சி செய்தனர்.
அதற்காக யானையின் இரு புறங்களிலும் வாகனத்தை நிறுத்தி, வாகன ஓட்டிகள் யானைக்கு இடையூறு செய்யாமல் சாலையைக் கடக்கச் செய்தனர். அப்போது, சாலையைக் கடக்க முயன்ற யானைக்கு எதிரே வந்த கேஸ் சிலின்டர் வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் யானை என்ன செய்யப் போகிறது என்ற அச்சத்தில் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதன்பின்னர், இன்று அந்த யானை காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், தற்போது பலாப்பழ சீசன் ஆரம்பித்துள்ளதால், மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதியில் உள்ள இருந்து அதிக அளவு காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுக்கக் கூடும். எனவே, மேட்டுப்பாளையம் குன்னூர் - தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், காட்டு யானைகளைக் கண்டவுடன் அது அருகே சென்று செல்பி எடுக்கும் விபரீத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.