தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் எங்கே? பிரதமர் வாக்குறுதி என்ன ஆனது? - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு! - பிரதமர் நரேந்திர மோடி
Published : Feb 3, 2024, 12:44 PM IST
|Updated : Feb 3, 2024, 2:19 PM IST
டெல்லி: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நேற்று (பிப்.2) நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. அதில் திமுக எம்.பி-யும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், "தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட மூன்று குழுக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றன. தமிழகத்தில் சூழலை அவர்கள் முழுவதும் அறிந்தும், எவ்வித உதவிகளையும் செய்யவில்லை.
மேலும், தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வேண்டி, 37 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும் எந்த பயனும் இல்லை. அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் வாக்களித்து ஒரு மாதம் ஆகின்றது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை.
இதனால் தான் தமிழகம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டுகின்றது. குறிப்பாக வெள்ள நிவாரணம், மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, சென்னை மெட்ரோ பணி உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசின் செயல்பாடுகள் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டும் தன்மையிலேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.