கோவையில் குடுகுடுப்பை அடித்து நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர்! - திமுக
Published : Feb 10, 2024, 3:50 PM IST
|Updated : Feb 15, 2024, 7:03 AM IST
கோயம்புத்தூர்: நாடளுமன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொகுதிப் பங்கீடு, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக தேர்தல் வருகின்றது என்றாலே, அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வர். அப்படி மேற்கொள்ளும்போது சிலர் உணவுகள் தயாரிப்பது, மேளதாளம் அடித்து ஓட்டு கேட்பது போன்ற வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வர். அந்த வரிசையில், தற்போது ‘குடுகுடுப்பை’ அடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர், கோவையைச் சேர்ந்த திமுகவினர்.
கோயம்புத்துரை அடுத்துள்ள பொள்ளாச்சி வட்டத்தில்தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் ‘குறி சொல்லும் நபர்’ போல வேடமணிந்து, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவிற்கு ஆதரவாக ’குடுகுடுப்பை’ அடித்து பிரசாரம் செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த திமுகவினர், இவரை பார்த்தால் குறி சொல்லும் நபராக தெரியவில்லையே என்று அருகில் சென்று பார்த்த போதுதான் தெரிந்தது அவர் திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர் என்று. இதனையடுத்து அவருடன் இணைந்த திமுகவினர் வீதிவீதியாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர்.