அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த ரோபோ! ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்.. - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 11, 2024, 11:04 PM IST
தருமபுரி: தமிழகத்தில் வரும் 19 ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் குதிரை வண்டி ஓட்டுவது, வடை சுடுவது, பரோட்டா போடுவது, டிராக்டர் ஓட்டுவது, சைக்கிளில் சென்றே வாக்கு சேகரிப்பது போன்ற வித்தியாசமான முறைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பட்டியலில் தருமபுரி அதிமுக வேட்பாளர் புதிய உக்தியாக தொழில்நுட்ப முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அசோகன் போட்டியிடுகிறார். மக்களைக் கவரும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் விதமாக அவர் நவீன தொழில்நுட்பமான ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜி (AI technology) ரோபோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் பேசுவது போன்ற காணொளிகளை மடிக்கணினி மூலம் ஔிபரப்பி, தருமபுரி நகரப்பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரோபோ வாக்கு சேகரிப்பதை வியந்து பார்த்துச் சென்ற நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.