நீயா? நானா? வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருப்பதில் பாஜக கோஷ்டி மோதல் - 3 பேர் கைது - ஆம்பூரில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024
Published : Apr 20, 2024, 8:53 AM IST
திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்த வாக்குச்சாவடிகளில் குவிந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தேர்தலுக்கு முன்னதாகவே சில வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கருதப்பட்டு, அங்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக சார்பில் பூத் ஏஜென்ட்களாக அமர்வது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் அன்பு மற்றும் பாஜக நிர்வாகி கோகுல் தரப்பினருக்கிடையே ஏற்கனவே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நேற்று வாக்குப்பதிவின் போது மீண்டும் அன்பு மற்றும் கோகுல் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது அங்கிருந்த போலீசார் முன்னிலையிலேயே இரு கோஷ்டியினரும் மோதிக்கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட பாஜகவைச் சேர்ந்த கோகுல், விக்னேஷ், ஸ்ரீவர்ஷன் ஆகியோரை கைது செய்த ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.