சித்ரா பௌர்ணமி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - Sundara Mahalingam Temple - SUNDARA MAHALINGAM TEMPLE
Published : Apr 23, 2024, 10:54 AM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குப் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யக் கடந்த 21ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்கள் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் மொட்டை எடுத்து தங்களின் நேற்றிக்கடனை செலுத்தினர்.
இதில், மலை ஏறும் பக்தர்களைத் தீவிர சோதனைக்குப்பிறகே வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.