அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா தொடக்கம் - Arunachaleswarar Temple
Published : Apr 14, 2024, 6:59 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் கோயிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பந்தக்கால் நடும் விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று முதல் 23ஆம் தேதி வரை 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர், மகிழ மரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூப்போடும் விழா நடைபெற உள்ளது.