பைக்கில் சென்றவரை ஃபாலோ செய்து கீழே தள்ளிய மர்ம நபர் - சிசிடிவி காட்சி வெளியீடு - Coimbatore accident
Published : Apr 1, 2024, 2:34 PM IST
கோயம்புத்தூர்: கோவை - மேட்டுப்பாளையம் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலையாகும். இந்த சாலையில் நேற்று முன்தினம் துடியலூரில் இருந்து கோவை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இருவரும் சாலையில் சென்றுக் கொண்டு இருக்கும் போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வந்த ஒருவர், திடீரென மற்றொருவரை வாகனத்துடன் சேர்த்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இருசக்கர வாகனம் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென அந்த நபர் கீழே தள்ளிவிட்டதால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த அந்நபர் இதில் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கீழே விழுந்தவர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக, துடியலூரில் இருந்து கோவை நோக்கி வந்தபோது, கவுண்டர் மில் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கையால் கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகிய நிலையில் அக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.