நீலகிரியில் அரியவகை பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.. - bird survey
Published : Jan 30, 2024, 2:55 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா பகுதிகளில் பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணியானது தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
அந்த வகையில், முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் வித்யா உத்தரவின்படி, முதுமலை மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் காணப்படும் ஆறு பறவைகள் கணக்குகள் எடுக்கப்பட்டன. இதில் மீன் கொத்திப் பறவை, வரிவாலாட்டி குருவி, நீர் காகம், செம்பருந்து, நீர் நாரை, வெண் கொக்கு, சாம்பல் நிற வாலாட்டி குருவி உள்ளிட்ட இவ்வகை பறவை இனங்களின் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் இயல்புடைய, அரிய வகை பறவைகளை மட்டுமே கணக்கெடுப்பதாக முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் வித்யா தெரிவித்துள்ளார்.