பண்ணாரி சாலையில் கரடி நடமாட்டம்.. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!
Published : Mar 6, 2024, 3:43 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக, வனவிலங்குகள் சாலையைக் கடப்பதை எளிதாகத் தெரிந்து கொள்ள, சாலையின் இருபுறமும் 10 மீட்டர் தூரத்துக்கு புற்கள் செடி கொடிகள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், அதிக அளவிலான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இருப்பினும், பண்ணாரி வனத்தில் கரடி நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பண்ணாரி சாலையில் குய்யனூர் பிரிவு என்ற இடத்தில் கரடி ஒன்று நடமாடியது. இதைக் கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள், அதனை வீடியோவாக எடுத்து சமூத வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். கரடி நடமாட்டம் இல்லாத பண்ணாரி சாலையில் தற்போது கரடி நடமாடுவதால், இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், வாகனத்தை நிறுத்தி இளைப்பாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.