அரியலூர்: சித்தாங்காத்தவர் கோயில் கும்பாபிஷேகம்..ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - Kumbabishekam
Published : Apr 22, 2024, 10:30 AM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால் பல ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் சிதிலமடைந்த கோயிலைப் புதுப்பித்த சிறுகடம்பூர் கிராம மக்கள், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து கணபதி ஹோமத்துடன் விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, தமிழ் தேவார திருமுறைகள் இசைக்கப்பட்டு, மேளதாளத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோயில் விமானத்தில் அமைந்துள்ள கலசத்திற்குப் புனித நீரைச் சிவாச்சாரியார்கள் ஊற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பினர். பின்னர் மகா தீபாரதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறுகடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.