பாபநாசம் அருகே அச்சுறுத்தும் வனவிலங்குகளால் கிராமமக்கள் பீதி - வனவிலங்குகளால் பீதி
Published : Feb 4, 2024, 8:25 AM IST
திருநெல்வேலி: பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அனவன்குடியிருப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் கரடிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்திற்குள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று, ஒரு வயதுடைய கன்றுக் குட்டியை இரவு நேரத்தில் தாக்கியது. மேலும், கடந்த இரு தினங்களாவே கரடிகள் ஜோடியாக கிராமம் முழுவதும் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று (பிப்.3) காலை யானைக்கூட்டமும் அப்பகுதி நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இவ்வாறாக ஒரு கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிந்து, அட்டகாசம் செய்து வருவதால் கிராமவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாபநாசம் வனச்சரக அலுவலர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர், சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மேலும், மக்களை அச்சுறுத்தி வரும் இவ்விலங்குகளை விரட்டும் பணியில் மூன்று குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.