கோவை மெட்ரோ பணிகள்; ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு! - COIMBATORE METRO Rail - COIMBATORE METRO RAIL
Published : Jul 4, 2024, 2:59 PM IST
கோயம்புத்தூர்: சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை வரவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.10 ஆயிரத்து 740 கோடியும், மதுரை மெட்ரோ திட்டத்துக்கு ரூ.11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய 2 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவிநாசி சாலையைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா வழியாக நீலாம்பூர் வரை 20.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது.
அதேபோல், சக்தி சாலையைப் பொறுத்தவரை, காந்திபுரம் பகுதியில் துவங்கி கணபதி, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சரவணம்பட்டி, விஸ்வபுரம் வழியாக வளையம்பாளையம் வரை 14.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 14 ரயில் நிலையங்களைக் கொண்டும் அமையவுள்ளதாக கடந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் உயர்மட்ட வழித்தடங்களில் அமைய உள்ளதாகவும், சுரங்க வழித்தடம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் இயக்குநர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியூ, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுச் செயலாளர் ரேகா அடங்கிய குழுவினர் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் கால முறை குறித்தும், பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள், ஆய்வுக்காக 2 நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்தனர். மேலும், இந்த ஆய்வு மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மெட்ரோ பணிகள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.