ஆந்திராவில் இவருக்கு தான் வெற்றியாம்! - அண்ணாமலையார் கோவிலில் சொன்ன ரோஜா! - TIRUVANNAMALAI TEMPLE - TIRUVANNAMALAI TEMPLE
Published : May 20, 2024, 2:00 PM IST
திருவண்ணாமலை: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தற்போதுவரை 4 கட்ட வாக்குப்பதிவானது நடந்து முடிந்துள்ளது. 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெற்று வருகிறது. இதில் 4வது கட்டமாக, ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநிலத்தின் சட்டசபைக்கும் அன்று தேர்தல் நடைபெற்றது. இதில், நகரி சட்டமன்றத் தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை ரோஜா போட்டியிட்டார். வரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலிபானு பிரகாஷ் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி வேட்பாளரும் நடிகையுமான ரோஜா இன்று (மே 20) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு ரோஜா பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவேன். அதேபோல நேற்று இரவு கிரிவலம் மேற்கொண்டு இன்று அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டேன். அண்ணாமலையார் அருளால் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். தேர்தலில் ஜெகன் மோகன் கண்டிப்பாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.