சால்வையை இதற்காகத்தான் தூக்கி எறிந்தேன்.. சிவக்குமார் விளக்கம்! - நடிகர் சிவகுமார்
Published : Feb 27, 2024, 7:57 PM IST
சென்னை: நடிகர் சிவகுமார் 80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதனைத் தொடர்ந்து, அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சமீபத்தில் சிவகுமார் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார்.
அப்படி அவர் பங்கேற்கும் சில நிகழ்ச்சிகளில், அவரது நடவடிக்கைக்காக சர்ச்சையும் ஆகி வருகிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தபோது, செல்போனை தட்டிவிட்டதற்காக பல கண்டனங்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, அந்த ரசிகருக்கு புதிய போனையும் வாங்கிக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையில், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில், விழாவில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் சால்வையை போர்த்த கொடுத்தார். ஆனால், சிவகுமார் அதை பிடுங்கி எறிந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பெரும் சர்ச்சையும், கண்டனங்களும் குவிந்தன.
தற்போது, காரைக்குடி சால்வை சர்ச்சை சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றை சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதில், "கரீம் தனது தம்பி, உயிர் நண்பன். தனக்கு பொதுவாகவே மேடைகளில் சால்வை போடுவது பிடிக்காது. இது தெரிந்தும் கரீம் அந்த செயலை செய்ய வந்ததால்தான் நான் கோபமடைந்து சால்வையை பிடுங்கி எரிந்தேன். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவரது தவறு என்றால், பொதுஇடத்தில் சால்வை வாங்கி எறிந்ததும் எனது தவறுதான், அதற்காக நான் வருத்தப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.