100% வாக்குப்பதிவு..சிலம்பம் சுழற்றி அசத்திய 73 வயது தாத்தா.. வீடியோ வைரல்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 13, 2024, 4:17 PM IST
தென்காசி: தென்காசியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 73 வயது முதியவர் சிலம்பம் சுழற்றி அசத்தியதை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இதையொட்டி 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது. அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள், வாகன பேரணி, விழிப்புணர்வு வசனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று (ஏப்.13) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாணவர்கள் சிலம்பம் சுழற்சி பேரணியாக வந்து ஐடிஐ வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், 73வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிலம்பம் சுழற்றி அசத்தினார். மேலும், அந்த முதியவரைச் சுற்றிருந்தவர்கள் விசிலடித்து முதியவர் சிலம்பம் சுற்றியதை உற்சாகப்படுத்தியதோடு, அதனைக் கண்டு ரசித்தனர்.