விநாயக ஜனன அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Published : Oct 9, 2024, 7:27 AM IST
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.3ஆம் தொடங்கி வருகின்ற 12ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அதன்படி நவராத்திரி விழாவின் 6ஆம் நாளான நேற்று (அக்.08) கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் விநாயகர் ஜனன நிகழ்வு கொலுவாக வைக்கப்பட்டு மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகளில் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.
நவராத்திரி விழாவில் 7ஆம் நாளான இன்று (அக்.09) எல்லாம் வல்ல சித்தர் கோலம், 8ஆம் நாள் (அக்.10) மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம், 9ஆம் நாள் (அக்.11) சிவபூஜை என அம்மன் காட்சி அளிக்கவுள்ளார். இதில் மகிஷனை அம்மன் கொன்ற வெற்றி நாள்தான் விஜயதசமியாக 10ஆம் (அக்.12) நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 108 வீணை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.