கதைப்போமா என்ற காலங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறோம் நாம்! அளப்பரிய தொழில்நுட்ப வளர்ச்சியின் கட்டத்தில் இருக்கும் நாம், பேச ஆள் இல்லை என்றால் கூட, அதற்கென வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடல்கள் நமக்காக தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஓபன்-ஏஐ சாட்-ஜிபிடி (OpenAI's ChatGPT), மெட்டா லாமா (Meta Llama), கூகுள் ஜெமினை (Google Gemini), மைக்ரோசாப்ட் கோ-பைலட் (Microsoft CoPilot) என பட்டியல் பெரிது. நமக்கு தேவைப்படும் தகவல்களை வேகமாகவும், விவேகமாகவும் இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் தர முடியும்.
இந்த நேரத்தில் சிலிக்கான் வேலி ஏஐ தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு பேரதிற்ச்சியாக சந்தைக்குள் நுழைந்தது சீனாவின் டீப்-சீக் ஆர்1 (DeepSeek R1) எனும் ஏஐ மாடல். மேற்கூறப்பட்ட முந்தைய நிறுவனங்கள் தராத அம்சங்களையும், துல்லியத்தையும் தங்களின் ஏஐ சாட்பாட் (AI Chatbot) பயனர்களுக்கு வழங்கும் எனவும் நிறுவனம் மார்தட்டியது.
தகவல் திருட்டு?
ஆனால், அதற்குள் புயல் அடித்தது போல ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது. ப்ளூம்பெர்க் செய்தியின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்-ஏஐ இணைந்து மலிவு விலையில் பல அம்சங்களுடன் கொண்டுவரப்பட்ட DeepSeek மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஓபன்-ஏஐ கூற்றுபடி, தங்கள் தரவுகளை வைத்து தான் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை தயாரித்திருக்கலாம் என்று சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
“பொதுவாக டெவலப்பர்கள் பிற தரவுகளைப் பயன்படுத்தி தங்களின் ஏஐ மாடல்களை உருவாக்குவது இயல்பான ஒன்று. இதற்காக பெருமளவு தகவல்கள் அவர்களுக்குத் தேவைப்படும். பொது டெவலப்பர் தளங்களில் இருக்கும் சாட்-ஜிபிடி தரவுகளும் அவ்வாறு அணுகப்படும். தங்களின் மென்பொருள்களில் சாட்-ஜிபிடி சேவையை இணைப்பதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
டெவலப்பர்கள் தங்கள் சொந்த பயன்பாடுகளுடன் அதன் AI ஐ ஒருங்கிணைக்க OpenAI-இன் மென்பொருளை கட்டமைக்கும் தகவல்களை (API) பயன்படுத்தலாம் என்றாலும், போட்டி மாதிரிகளை உருவாக்கி உள்ளடக்கிய சேவைகளை முடக்குவது விதிமீறலாகும்,” என்று ஃபினான்சியல் டைமஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது. எனினும், தாங்கள் கண்டறிந்த ஆதாரங்களை இதுவரை ஓபன்-ஏஐ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு தானே தணிக்கை
இந்த சூழலில், டீப்-சீக் சாட்பாட் சீனாவை குறித்த சிலத் தகவல்களை தணிக்கை செய்து வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, சீனா தொடர்பான சிலத் தகவல்களை இந்த ஏஐ மாதிரி வழங்குவதும், பின்னர் அதனை உடனடியாக அழிப்பதும், சிலவற்றை குறித்து தகவல் அளிக்க மறுப்பதும் என களோபரம் செய்வதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கார்டியன் பத்திரிகை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சீனாவில் பேச்சு சுதந்திரம் குறித்து டீப்-சீக்கிடம் ஒரு பயனர் கேட்டதாக தெரியவந்துள்ளது. சாட்பாட் ஆரம்பத்தில் விரிவான தகவல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளை வழங்கியிருந்தாலும், அது திடீரென்று தன்னைத்தானே துண்டித்துக் கொண்டு "வெளிப்படையான" பதிலை மன்னிப்புடன் மாற்றியது. அந்த வகையான கேள்வியை எவ்வாறு அணுகுவது என்று பயனரிடம் தெரியவில்லை என்று டீப்-சீக் சாட்பாட் கூறியதாக கார்டியன் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை டீப்-சீக் சாட்பாட்டிடம் கேட்டோம். ‘சீனாவில் சுதந்திரமான பேச்சு’, ‘சாட்-ஜிபிடி ஏபிஐ தகவல்கள் பயன்படுத்தப்பட்டதா?’, ‘எது சிறந்த ஏஐ சாட்பாட்’ என்பன போன்ற சில கேள்விகள் இருந்தன. அனைத்திற்கும் ஒரு நடுநிலையான சார்பற்ற பதிலை டீப்-சீக் தந்தது. குறிப்பாக, சீனாவில் சுதந்திரமான பேச்சு என்பது குறித்து கேட்டபோது, ‘சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மக்களால் சுதந்திரமாக பேச முடியும்,’ என பதிலளித்தது.