ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அதில் இடம்பெற்றன. இந்த நேரத்தில் புதிய ஐபோனை எந்த நாட்டில் இருந்து விலைக் குறைவாகப் பெறமுடியும் எனப் பயனர்கள் இணையத்தை உலாவி வருகின்றனர். அவர்களுக்காகவே, ஐபோன் 16 சீரிஸ் இந்திய விலையுடன், பிற நாட்டு விலையை ஒப்பிட்டு கீழே தொகுத்துள்ளோம். அந்தந்த நாட்டு வரி அமைப்பிற்கு ஏற்றவாறு விலைகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் நான்கு ஐபோன்களையும் பயனர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் செப்டம்பர் 20 முதல் ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக போன்களை வாங்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 16 / 16 பிளஸ் விலை (iPhone 16 / 16 Plus Price) குறைவாகக் கிடைக்கும் நாடு:
ஆப்பிள் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் போட்டி விலையில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஐபோன் 16 அடிப்படை மாடலை விட கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் அடிப்படை மாடல் விலை அதிகம். ரூ.5,000 வங்கித் தள்ளுபடியைக் கருத்தில் கொண்டால், 128 ஜிபி வகை ஐபோன் 16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் 74,900 ரூபாய்க்கு வாங்கலாம்.
இருப்பினும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாட்டுச் சந்தைகளில் இன்னும் மலிவாகக் கிடைக்கிறது. அங்கு சுமார் ரூ.67,000 முதல் அடிப்படை மாடலின் விலைத் தொடங்குகிறது. இந்தியர்கள் இன்னும் எளிதாக வாங்க வேண்டும் என்றால், உள்நாட்டில் வாங்கும் விலையில், சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய ஐபோனை வாங்கி வரலாம். சீனாவில் ரூ.69,000 எனும் விலையில் ஐபோன் 16 அடிப்படை மாடல் விற்பனைக்கு வருகிறது.