(சாவ் பாலோ) பிரேசில்: பிரேசிலில் எலான் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான X நிறுவனத்தை இடைநீக்கம் செய்ய பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணம், பிரேசில் ஒரு பொறுப்பு X பிரதிநிதியை நிர்ணயிக்கக் கூறிய நிலையில், அதை எலான் மஸ்க் மறுத்ததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தி அசோசியேட்டட் பிரஸ் (The Associated Press) செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பல மாதங்களாக பிரேசில் நீதிமன்றம் X தளத்தின் செயல்பாடுகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்த நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் பிரேசில் நீதித்துறை, X தளம் பேச்சுரிமை மற்றும் பாதுக்காப்பற்ற தன்மையுடன் இருப்பதாகவும், தீவிர வலதுசாரி கணக்குகள் பரப்பும் தவறான தகவல்களால் நாட்டில் ஏற்படும் பகைமைச் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் கூறி, பிரேசிலில் ஒரு X தளத்தின் செயல்பாடுகளுக்கான பிரநிதியை நிர்ணயிக்க கால அவகாசம் கொடுத்தது.
ஆனால், அந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையிலும், X தளம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், X தளத்திற்கு பிரேசில் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு முதல் பிரேசிலில் X தளம் முடக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் (வியாழன்கிழமை) X தனது அதிகாரப்பூர்வ உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் பக்கத்தில், “டி மோரேஸால் X-ஐ பிரேசிலில் முடக்குவார் என எதிர்பார்க்கப்பட்டதுதான். X தளம், அவரது அரசியல் எதிரிகளை தகர்த்தெரியக் கூறும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு எப்போதும் இணங்காது.
மேலும், நாங்கள் பிரேசில் நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்ள முயன்றபோது, நீதிபதி டி மோரேஸ் எங்கள் முன்னாள் பிரேசிலிய சட்டப் பிரதிநிதியை சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தினார். அவர் ராஜினாமா செய்த பிறகும், அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி உள்ளனர்.
நீதிபதி டி மோரேஸ் பிரேசில் நாட்டிற்கு பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவருடன் இருக்கும் அனைத்து பெடரல் நீதிபதிகளும் அவரது சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க வழி இல்லாமல் பயந்து உடன் இருக்கிறார்கள். X தளம் வெளிப்படையாக கூறுவதாவது, பயனர்களின் கணக்குகளை குற்றச்சாட்டுடன் கூறினால் முடக்க தயார். ஆனால் பிரேசில் உச்ச பெடரல் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அரசியல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் வலதுசாரி கட்சியுடன் இருக்கும் அனைத்து கணக்குகளையும் முடக்கக் கூறினால் அவற்றை X தளம் ஏற்க முடியாது” என பதிவிட்டிருந்தது.