ஐதராபாத்:ஆசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், உலக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் அனல் பறக்கிறது.
தேர்தல் பரப்புரை, வித விதமான வாக்குறுதிகள், எதிர்க் கட்சியினர் மேல் விமர்சனம் என்ற வரிசையில் செயற்கை நுண்ணறிவு பிரதான இடத்தை பிடித்து வட்டமடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் களம் காணும் கட்சிகள், வெற்றி வாகை சூட அனைத்து விதமான யுக்திகளை பயன்படுத்தி வரும் வேலையில், டீப்ஃபேக், வாய்ஸ் குளோனிங் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பல சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் தடம் பிடித்து அசுர வளர்ச்சியில் அடைந்து வருவது ஒரு புறம் இருந்தாலும், டீப்ஃபேக் போன்றவற்றால் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு பெரும் அபாயத்தை ஏற்படும் விதமாக இருப்பதாக பலர் எச்சரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
தேர்தல் சமயத்தில் பல போலி செய்திகள், வீடியோக்கள், ஆடியோக்கள் என ஏஐ தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. முன்னதாக, வங்கதேசத்தில் எதிர்கட்சியினரான ரூமின் பர்ஹானா நீச்சல் உடையில் இருப்பது போலவும், நிபுன் ராய் நீச்சல் குளத்தில் இருப்பது போலவும் டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுவது போல வாய்ஸ் குளோனிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆடியோ ஒன்று வெளியானது.
அந்த வகையில், வார்த்தை போர் நிறைந்த களமாக இருக்கும் தமிழ்நாடு அரசியல் களத்தில் விமர்சனங்களும், பதிலுக்கு பதில் வார்த்தை பேட்டிகளும் நடைபெற்று வரும் நிலையில், மறைந்த ஆளுமைகளை தேர்தல் பரப்புரையில் களம் இறக்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறது அதிமுக, திமுக. அதன்படி, மறைந்த ஆளுமைகள் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களை AI தளத்தில் சந்தித்து வருகின்றனர்.