சென்னை:சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த 30ஆம் தேதி பிலிப் நெல்சன் லியோ என்பவர் யூடியூபர் பிரியாணி மேன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'The Biriyani Man என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் The Biriyani man Youtuber அபிஷேக் ரபி என்பவர் கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் விதத்தில் நடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.
மேலும், மற்ற மதத்தினரிடையே பகை, பயம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டும் நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தியுள்ளதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டதாகவும் புகார் அளித்திருந்தார். ஆகையால், கிறிஸ்தவ மதத்தைப் பற்றி இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த, யூடியூபர் அபிஷேக் ரபி என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் அதில் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்ற கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த புலன் விசாரணையில், அபிஷேக் ரபியின் இன்ஸ்டாகிராம் மற்றும் 'X' தளத்தின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், இவ்வழக்கில் தொடர்புடைய அபிஷேக் ரபி பற்றிய விவரங்கள் தெரியவந்ததன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அபிஷேக் ரபியை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.