தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் பாஸ்கர் (52). இவர் நேற்று (ஜூலை 29) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றினை கொடுக்க வந்துள்ளார்.
அப்போது, திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக பாஸ்கரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பாஸ்கர் என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே நடைபாதை சம்பந்தமாக நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது என்பதும், இதனால் பாஸ்கர் நேற்று (ஜூலை 29) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக புறப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மகன் விக்னேஸ்வரன் (30) என்பவர், தான் நடத்தி வரும் யூடியுப் சேனலில் பாஸ்கரிடம் இதுபோன்று புகார் மனு கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது, உங்கள் மீது தீ வைத்துக் கொள்வது போல் செய்யுங்கள். அப்போது நான் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறேன், அப்போதுதான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே, பாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, சிப்காட் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் வனசுந்தர், யூடியூபர் விக்னேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:தாம்பரம் ரயில்வே கேன்டீன் உரிமையாளருக்கு சம்மன்? ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் அடுத்த நகர்வு!