தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது உலகப் புகழ்வாய்ந்த பூண்டி மாதா கோயில். தற்போது இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு தேர்ப் பவனி நடைபெறவுள்ளது. ஆகையால், இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
அந்த வகையில், இத்திருவிழாவைக் காண சென்னையைச் சேர்ந்த சார்லஸ் என்பவரது மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் பூண்டிக்கு வந்திருந்துள்ளனர். இந்த நிலையில், அனைவரும் கோயில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், 5 பேரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அருகிலிருந்த நபர்கள் கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலில் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் கலையரசன், கிஷோர் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்ட தீயணைப்புத் துறையினர் கரைக்குக் கொண்டு வந்தனர். அதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பிராங்கிளின், ஆண்டோ, மனோகரன் ஆகிய 3 நபர்களின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் நின்ற டூவிலரை திருட முயற்சி.. குறைத்துக் காட்டிக் கொடுத்த நாய்.. சிக்கியவருக்கு தர்ம அடி!