தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு; ஹோட்டல் அறையில் வெடித்த சண்டை...பெண் கொலையில் திடீர் திருப்பம்! - MAHABALIPURAM LADY MURDER

மாமல்லபுரம் தனியார் விடுதியில் காதலியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.

கைதான ஜெயராஜ்
கைதான ஜெயராஜ் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 6:22 PM IST

Updated : Jan 24, 2025, 7:11 PM IST

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

போலீசார் விசாரணையில் வெளியான தகவலின்படி, மதுராந்தகம் சுக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (28). கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சங்கீதா (32). இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இந்நிலையில், இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இருவரும் மாமல்லபுரம் சென்றுள்ளனர். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, கழிவறைக்கு சங்கீதா சென்ற போது அவரது செல்போனை எடுத்து ஜெயராஜ் பார்த்துள்ளார். அதில், சங்கீதா பல பேருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ், சங்கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சங்கீதாவின் கழுத்தை நெரித்து ஜெயராஜ் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சங்கீதா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ஜெயராஜ் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதை போல க்ரைம் சீனை உருவாக்கி நாடகமாடியுள்ளார். ஆனால், பிரேத பரிசோதனையில் சங்கீதாவை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஜெயராஜை பிடித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்தது அவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீஸ் விசாரணையில், ஏற்கனவே திருமணமான சங்கீதாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும், ஜெயராஜுக்கும் ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவில் பழகி வந்த பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய இளைஞர் கைதாகி சிறைக்கு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 24, 2025, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details