வேலூர்: புகழ்பெற்ற வேலூர் கோட்டை அகழி ஆகியவற்றை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். அந்த வகையில், இன்று மாலை சுமார் 4.15 மணி அளவில் கோட்டை அகழியைச் சுற்றி மக்கள் இருந்துள்ளனர். அப்போது, திடீரென்று ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட்டை அகழி நீரில் குதித்து மூழ்க ஆரம்பித்துள்ளார். அதேநேரம், குதித்த சில நிமிட நேரத்தில் அவரது உடல் மேலே வந்துள்ளது.
மேலும், இரண்டு முறைக்கு மேல் தண்ணீரின் மேற்பகுதிக்கு வந்த அவரது உடலானது, கடைசியாக உள்ளே சென்றுள்ளது. இதனைச் சுற்றி இருந்தவர்கள் நீரில் விளையாடுகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால், நீரில் மூழ்கிய அவர் மீண்டும் வராததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சுமார் 20 நிமிட தேடுதலுக்குப் பின் அவரது உடல் கிடைத்துள்ளது. நீல நிற பேண்ட் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்த அவர் இடது கையில் வாட்ச் அணிந்திருந்துள்ளார்.