கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவன்தொட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில், போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று 4 பேரைக் கைது செய்தோடு அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தேவன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ருத்ர மாதைய்யா (32) என்பவர், போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களில் தனது வாகனத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகு தான் இருசக்கர வாகனம் திருப்பித் தரப்படும் என அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ருத்ர மாதைய்யா மதுபோதையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மாலை அஞ்செட்டி காவல் நிலையம் சென்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
பின்னர் அவரை மீட்ட போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ருத்ர மாதைய்யாவுக்கு அங்கு பலகட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.